'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

மண்ணில் புதைந்த அடிகுழாய்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நல்ல கவுண்டனூர் கிராமத்தில் தண்ணீர் அடிகுழாய் உள்ளது. உரிய பராமரிப்பின்றி இந்த அடிகுழாய் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணில் புதைந்து காட்சிப்பொருளாக மாறி உள்ளது. இதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமரன்,ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

====

சேதமடைந்த சாலை

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி நியூகாலனி பெரிய காளியப்ப கவுண்டர் தெருவில் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஞானசேகரன், தர்மபுரி.

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி ஊராட்சியில் 2 மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்களும், வாகனஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- மாதவன், சுக்கம்பட்டி.

====

தெரு நாய்கள் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லைநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

- ஆர்.பாஸ்கரன்,ஓசூர்.

===

வீணாகும் குடிநீர்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம், தத்தாதிரிபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் தற்போது உடைந்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தினமும் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

- கோகுல், நாமக்கல்.

====

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்கு நாள்தோறும் ஏராளமான மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பஸ்சில் சென்று வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்றவாறும், தொங்கிக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி சூளகிரி பகுதியில் கூடுதல் பஸ்களை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும்.

- நாகராஜ், சூளகிரி.

நாமக்கல்லில் இருந்து தூசூர் வழியாக செல்லும் பஸ்கள் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒரு பஸ் வந்து செல்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கொரோனா பரவலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்தது போல் அந்த பகுதியில் மீண்டும் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரபாகரன், குரும்பப்பட்டி.

=====

சுகாதார சீர்கேடு

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, சூளகிரியில் சாலையோரங்களில் மூட்டை, மூட்டையாக கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

-சீனிவாசன், கீழ்த்தெரு, சூளகிரி

===

கலங்கலாக வரும் குடிநீர்

சேலம் சுப்ரமணிய நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய்கள் உள்ளன. கடந்த 3 வாரங்களாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் மிகவும் கலங்கலாக வருகிறது. இந்த பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக குழிபறித்ததில் குழாய்கள் உடைந்ததால் குடிநீர் இவ்வாறு வருவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து தரவேண்டும்.

- சுரேஷ், சுப்ரமணியநகர், சேலம்.


Next Story