'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்துகள் தடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. அந்த விபத்துக்களில் உயிர்பலி ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் குறுக்கே வழி ஏற்படுத்தி சாலைகளின் குறுக்கே இருசக்கர வாகனங்கள் வருவதும் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளையும், உயிர் இழப்புகளையும் குறைத்திட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனியப்பன், ஓசூர்.
====
கூடுதல் மின்விளக்குகள்
தர்மபுரி நகரை ஒட்டி உள்ள சோகத்தூர் கூட்ரோடு பகுதியில் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் 4 வழி சாலைக்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 சாலைகள் இணையும் இந்த பகுதி இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள், நடந்து செல்வோர்் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சோகத்தூர் கூட்ரோடு பகுதியில் கூடுதலாக மின்விளக்குகளை அமைத்து இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
-கண்ணன், தர்மபுரி.
===
பயன்பாடு இல்லாத தகவல் பலகை
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில், அலுவலகம் தொடர்பான பல்வேறு தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகை தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பலகையில் சினிமா போஸ்டர் உள்ளிட்ட பல்வேறு விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல ஏரியூர் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு பெயர் பலகைகள், தகவல் பலகைகள் வழிகாட்டி பலகைகள் போன்றவைகள் போஸ்டர் ஒட்டும் இடமாக உள்ளது. எனவே போஸ்டர் ஒட்டுவதை தடுக்கவும், பயன்பாடு இல்லாத இந்த தகவல் பலகையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், ஏரியூர், தர்மபுரி.
====
சாலையின் நடுவே பள்ளம்
ஓமலூரில் இருந்து சங்ககிரி, மேட்டூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து விபத்து ஏற்படுகிறது. இருசக்கர, கனரக வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-குமார், ஓமலூர்.
====
போன் வசதி இல்லாத போலீஸ் நிலையம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கரை கிராமத்தில் உள்ள போலீஸ் நிலைத்தில் எடப்புலி நாடு, ஆலத்தூர் நாடு, சித்தூர் நாடு, பைல் நாடு, குண்டனி நாடு, பெரக்கரை நாடு மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்து தீர்வு அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் அந்த போலீஸ் நிலையத்திற்கு என போன் வசதி செய்யப்படவில்லை. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு போன்றவர்களது செல்போன் எண்களை வாங்கி அதன்பிறகு புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே செங்கரை போலீஸ் நிலையத்திற்கு போன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராமலிங்கம், செங்கரை, நாமக்கல்.
===
தெரு நாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் 3, 4-வது தெருவில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் தெருவில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைசந்திரன், தாதகாப்பட்டி , சேலம்.
சேலம் மிட்டாபுதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் குழந்தைகள் வீட்டை வெளியே வர பயப்படுகிறார்கள். தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-ம.சந்தோஷ்குமார், மிட்டாபுதூர், சேலம்.
=====
சுகாதார சீர்கேடு
சேலம் தளவாய்பட்டி ஊராட்சி ஏரி காலனியில் ரேஷன் கடை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மழைக் காலங்களில் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ரேஷன் கடைக்கு முறையான சாலை வசதியும் இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க மக்கள் சேற்றில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புஷ்பராஜ், தளவாய்பட்டி, சேலம்.
====
கேபிள் குழியை மூட வேண்டும்
நாமக்கல்-சேலம் மெயின் ரோடு முருகன் கோவில் அருகே கேபிள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. இதனை சரியாக மூடாததால் ஆங்காங்கே பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும்.
-சுந்தரராஜூ, சேலம்.
====