'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை நடுவே மின்கம்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி மேல்சோமார்பேட்டை, அதியமான் நகரில் சாலை நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி காயம் அடைகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், மேல்சோமார்பேட்டை, கிருஷ்ணகிரி.
===
அதிக ஒலி ஆபத்து
தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் விதிமுறையை மீறி அதிக ஒலியை எழுப்பிய படி பலர் முக்கிய சாலைகளில் சென்று வருகிறார்கள். இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் கவன தடுமாற்றத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலிஎழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தர்மபுரி.
====
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் பிற அரசு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோழிக்கழிவுகள் மூட்டை, மூட்டைகளாக கட்டிப் போட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகனசுந்தரம், கிருஷ்ணகிரி.
===
பாலத்தில் சேதமடைந்த இரும்பு குழாய்கள்
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து சிவதாபுரம் செல்லும் வழியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் இரும்பு குழாய்கள் உள்ளன. இரும்பு குழாய்கள் சேதமடைந்து உடைந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தகோபால், கந்தம்பட்டி, சேலம்.
====
தெரு நாய்கள் தொல்லை
சேலம் அழகாபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சிறுவர்களை வீட்டைவிட்டு வெளியே வரவும் அச்சப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளை துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-நந்தகுமார், அழகாபுரம், சேலம்.
====
பள்ளிக்கட்டிடம் அகற்றப்படுமா?
சேலம் மாவட்டம் 19-வது வார்டு்க்கு உட்பட்ட ஜாகீர் சின்ன அம்மாபாளையத்தில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியின் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விழுந்து சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதனால் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் அதில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய பள்ளிக்கட்டிடத்தை இடிந்து அகற்றவில்லை. இதனால் மாணவர்கள் பழைய கட்டிடத்தில் சென்று விளையாடுவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை விரைவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடித்து அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ்குமார், ஜாகீர்சின்ன அம்மாபாளையம், சேலம்.
===