புகார் பெட்டி
புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு சேதமடைந்து தொங்கியபடி காணப்பட்டது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின் விளக்கை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஆபத்தான மின்கம்பம்
திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட தும்பகோடு அலெக்சாண்டர்புரம் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-இன்பராஜ், தும்பகோடு.
நடவடிக்கைேதவை
குலசேகரத்தில் இருந்து குளச்சலுக்கு தடம் எண் 332 கொண்ட அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் நடுப்பகுதியில் வலது பக்க இருக்கை ஒன்றின் பின்புறம் ஆபாசமான வார்த்தைகள் சமூக விரோதிகளால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே, அந்த வார்த்தைகளை அழிக்கவேண்டும், இதுபோன்று எழுதுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், குலசேகரம்.
விவசாயிகள் அவதி
லீபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாட்டுக்குளத்தில் இருந்து லெட்சுமிபுரம் வழியாக லீபுரம் விவசாய நிலங்களுக்கு கால்வாய் கரையோரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைக்கும் கால்வாய் கரையோரம் உள்ள தடுப்பு சுவருக்கும் இடையே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-முரளி கார்த்திக், லீபுரம்.
கழிவுகளை அகற்ற வேண்டும்
நாகர்கோவில் மாவட்ட கோர்ட்டு அருகே முத்தமிழ் தெரு உள்ளது. இந்த தெருவில் கழிவுநீர் ஓடை தூர்வாரப்பட்டு அதன் அருகிலேயே கொட்டப்பட்டு உள்ளது. மேலும், தெருவில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பின் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓடையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், நாகர்கோவில்.
நடவடிக்ைக எடுக்கப்படுமா?
கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் உள்ளது. இந்த சாலையின் தெற்கு பகுதியில் முள்செடிகள் உள்ளிட்டவை வளர்ந்து சிறு காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் விஷ பாம்புகள் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், அந்த பகுதியில் சிலர் குப்பைகளையும் கொட்டி தீவைப்பதால், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, முள்செடிகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.ராம்தாஸ், சந்தையடி.