புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

தற்காலிக பாலம் சேதம்

தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு இடையே நாஞ்சில் புத்தனாறுகால்வாய் செல்கிறது. கால்வாயில் மேல் குறுகலான பழமையான பாலம் இருந்தது. அந்த பகுதியில் விரிவாக்கப்பட்ட புதிய பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, கால்வாயில் அதிகளவில் தண்ணீர் பாய்வதால் தற்காலிக பாலத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, தற்காலிக பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், தாழக்குடி.

பழுதடைந்த மின்விளக்குகள்

நாகர்கோவில் இளங்கடை பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மாா்க்கெட்டுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள 2 மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்ரோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட ராமபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு செல்லும் சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ். ரவி, ராமபுரம்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குமரிசால் குளம் உள்ளது. இந்த குளத்தின் எதிரே சாலையோரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆர்.பிரபாகரன், லீபுரம்.

படித்துறை சீரமைக்கப்படுமா?

முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட முகமாத்தூரில் பைத்தாங்கி குளம் உள்ளது. இந்த குளத்தை கோழிப்போர்விளை, முகமாத்தூர், அமராவதி பகுதி மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் படித்துறை சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படித்துறையை சீரமைப்பார்களா?.

-ஜெயசேகர், முகமாத்தூர்.

ரெயில் இயக்க வேண்டும்

கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் உள்ள மக்கள் மதுரை, திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், தஞ்சை பெரியகோவில், நாகூர் தர்க்கா, வேளாங்கண்ணி ஆகிய புனித தலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த மார்க்கமாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் நலன் கருதி கொல்லத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கத்தில் ரெயில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மெர்லின் சோனியா, கன்னியாகுமரி.


Next Story