தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை கியூஆர் கோடு மூலம் இணையதளத்தில் பதிவு செய்து தீர்வுபெறலாம்.
மின் திருட்டு தடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து சிலர் திருட்டுத்தனமான மின்சாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் குறைந்த மின்அழுத்தத்தில் கிடைக்கிறது. இந்த மின்வினியோக குறைவால் இப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். மேலும் தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரியாமல் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் திருட்டை தடுத்து சீரான மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி தேவை
விருதுநகர் மாவட்டம் வெங்காநல்லூர் கிராமம் இ.எஸ்.ஐ.காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாருகால், கழிப்பறை, குடிநீர், குப்பை தொட்டி போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
வாருகால் வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூர் பஞ்சாயத்து கட்டளைபட்டி கிராமம் அருந்ததியர் காலனியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிைடயாது. இதனால் அங்குள்ள கோவில் முன்பாக கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.. மக்களின் நலன்கருதி இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் மெயின்பஜார் ரோடு பகுதியில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இப்பகுதியில் சிலர் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலம் அமைக்கப்படுமா?
ராஜபாளையம் அருகே புனல்வேலி கிராமத்தில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் கால்வாய் உள்ளது. காட்டுப்பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படும். எனவே இந்தப் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புனல்வேலியில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த நூலகம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விளாச்சேரியில் பழமையான நூலகம் உள்ளது. தற்போது இந்த நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும் நூலகத்தில் புத்தகங்களின் இருப்பும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தின் கட்டிடத்தை சீரமைக்கவும், புத்தகங்களின் இருப்பை அதிகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு இல்லாத கழிப்பறை
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பசும்பொன்நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிப்பறை பராமரிப்பற்ற நிலையில் சுகாதாரம் இல்லாமல் காணப்படுவதால் பொதுமக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடை வேண்டும்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் ரேஷன் கடை இல்லை. 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அரிசி, பருப்பு, சீனி போன்ற ரேஷன் பொருட்கள் வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவிப்பு பலகை அவசியம்
மதுரை விரகனூர் ரிங்ரோடு ரவுண்டானாவில் 6 பிரிவுகளாக சாலை பிரிந்து செல்கிறது. ஆனால் ராமநாதபுரம் செல்லும் சாலையில் மட்டுமே அறிவிப்பு பலகை இருப்பதால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஊர் திசை காட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகனஓட்டிகள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்லும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இந்த ரவுண்டானாவின் அனைத்து சாலை பிரிவுகளிலும் ஊர் பெயர் காட்டும் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்மாய் தூர்வாரப்படுமா?
மதுரை மாநகராட்சி செல்லூர் கண்மாயில் கருவேலமரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயினை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.