தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை கியூஆர் கோடு மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மதுரை

சாலையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

மதுரை மாநகராட்சி 8-வது வார்டு மீனாட்சியம்மன் நகர்40 அடி சாலை தொடர் மழையின் காரணமாகவும், கனரக வாகனங்கள் செல்வதாலும் குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சண்முகவேல், மதுரை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கச்சிராயம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பால்குடி கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாருகால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாருகாலில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது. மேலும் தேங்கிய கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வாருகாலில் கழிவுநீர் தேங்காதவாறு சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-காஜா பக்ருதீன், மேலூர்.

ஆக்கிரமிப்பு

மதுரை மாநகராட்சி தெற்குவாசல் சின்னக்கடை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் சின்னக்கடை பகுதி சிக்னல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சாலையில் பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சிக்னலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக்குமார், மதுரை.

மேடு பள்ளமான சாலை

மதுரை மாநகராட்சி பீ.பீ.குளம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் உள்ள தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சேதமடைந்து காணப்படும் இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் பழுதாவதுடன், விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகிலன், மதுரை.

குடிநீர் தட்டுப்பாடு

மதுரை மாவட்டம் 30-வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவதில்லை. வாரத்திற்கு குறிப்பிட்ட தினங்கள் மட்டும் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் வாரத்தின் அனைத்து நாட்களும் சீரான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்புமணி, மதுரை.

கூடுதல் பஸ் தேவை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு மதிய நேரத்தில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் பலர் அடுத்த பஸ் வரும் வரை நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனலட்சுமி, திருப்புவனம்.


Next Story