'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகாருக்கு உடனடி தீர்வு
திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்த செய்தி நேற்று பிரசுரமானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைத்தனர். புகாரை பிரசுரித்த தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி.
-சுப்பிரமணியன், செட்டிநாயக்கன்பட்டி.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி காமாட்சிநகர் பிரதான சாலையின் நுழைவு பகுதியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், ஆத்தூர்.
திறந்தவெளி பாரான தெரு
திண்டுக்கல் நெட்டுத்தெரு கிணறு சந்து அருகில் உள்ள விநாயகர் கோவில் தெருவை சிலர் திறந்தவெளி மதுபான பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்பவர்களிடமும் வாக்குவாதம் செய்கின்றனர். இதனால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பாலாஜி, திண்டுக்கல்.
பயன்படாத கழிப்பறை
கொடைரோடு பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்
திண்டுக்கல்லில், பழைய கரூர் சாலையில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் மேல் பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் இரும்பு கம்பிகள் மூலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமான மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருப்பதி, திண்டுக்கல்.
அசுத்தமாகும் ஆற்றுப்படுகை
தேனி அருகே வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணை மற்றும் படித்துறை பகுதியில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆற்றுப்படுகை அசுத்தமாகி துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயராஜ், தேனி.
சாலையோரம் குவியும் குப்பைகள்
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், சாலையோர பகுதிகள் குப்பைக் கிடங்கு போல் மாறியதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், தேனி.
பாழாகும் விளை நிலங்கள்
தேனி-நாகலாபுரம் சாலையில் கண்டமனூர் சாலை சந்திப்பு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானம் வாங்குபவர்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களை திறந்தவெளி மதுபான பாராக பயன்படுத்தி வருகின்றனர். மதுபானம் குடித்து விட்டு பாட்டில்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் விளை நிலங்களில் வீசிச்செல்கின்றனர். இதனால் விளை நிலங்கள் பாழாகி வருகிறது. எனவே, இப்பகுதியில் திறந்தவெளியில் மது அருந்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமுருகன், ஜெயமங்கலம்.
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
கடமலைக்குண்டு தேவர் சிலை அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், கடமலைக்குண்டு.
தெருநாய்கள் தொல்லை
போடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.
-அசோக்குமார், போடி.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.