தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
சாலையில் வெளியேறும் தண்ணீர்
மதுரை மாவட்டம் கிருஷ்ணாநகர் அய்யர்பங்களா மலர்மாளிகை பகுதியில் குடிநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. சாலையும் முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்கவும், வாகனங்கள் பயணிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழையின் காரணமாகவும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி, மதுரை.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி கெங்காநகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரில் நடப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், அனுப்பானடி.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி தெற்கு தெரு 6-வது வார்டு பகுதியில் கழிவுநீர் வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. மேலும் பள்ளத்தின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்து உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்ச உணர்வுடனே இங்கு வசித்து வருகின்றனர். எனவே பள்ளத்தை மூடி, மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், வாடிப்பட்டி.
ஒளிராத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் மாபாளையம் முனியாண்டி கோவில் தெரு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகுமார், மதுரை.
சாலையில் தேங்கிய கழிவுநீர்
மதுரை மாவட்டம் அண்ணா பஸ் நிறுத்தம், சுப்புராமன் தெரு 34, 35-வது வார்டு பகுதியில் சாலையில் கழிவுநீர் கசிந்து வெளியேறி வருகிறது. ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் பிரதான வழித்தடம் என்பதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே பயணிக்கின்றனர். மேலும் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் தேங்கிய கழிவுநீரால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஜன், மதுரை.