புகார் பெட்டி
புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் வடசேரியில் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படம் வரையப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-முகேஷ், நாகர்கோவில்.
சேதமடைந்த மின்சார பெட்டி
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமம் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதி, கன்னியாகுமரி.
நடவடிக்கை தேவை
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் அருகில் யானைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது வரவேற்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது, நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின்னும் பழைய வரவேற்பு பலகை அகற்றப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பலகையை அகற்றி விட்டு புதிய வரவேற்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.
பொதுமக்கள் அவதி
திருவட்டார் புத்தன்கடை பகுதியில் பெட்ரோல் நிலையம் உள்ளது. இதன் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டு வந்தது. இதையடுத்து சாலையை சீரமைக்க தற்காலிகமாக அங்கு ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதிபரப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபுராஜ், புத்தன்கடை.
பயணிகள் ஏமாற்றம்
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் உதயமார்த்தாண்டம் செல்லும் பஸ் நிற்பதை குறிக்கும் வகையில் கட்டிடத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், உதயமார்த்தாண்டத்துக்கு பஸ் வருவதில்லை. கட்டிடத்தில் எழுதப்பட்டுள்ளதை நம்பி பயணிகள் பலர் அங்கு பஸ்சுக்காக வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, நிலைய கட்டிடத்தில் அங்கிருந்து பஸ் புறப்பட்டு செல்லும் ஊர்களை முறையாக எழுதிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆகாஷ், கருங்கல்.
சாலை சீரமைக்கப்படுமா?
இடைக்கோட்டில் இருந்து கேசவன்புதூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.
-நெல்சன், இடைக்கோடு.