புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சீரமைக்கப்படுமா?

ஈத்தமொழியை அடுத்த புதூர் சந்திப்பில் இருந்து பொழிக்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பாலத்தில் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்ஸ்ரீதரன், புதூர்.

தடுப்பு சுவர் தேவை

விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் சுக்குபாறை தேரிவிளை ெரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் மேற்கு புறத்தில் உள்ள சாலையில் கல்லூரி மாணவ-மாணவிகள், தங்களது வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இரு புறங்களிலும் பெரிய பள்ளம் உள்ளது. ஆனால், சாலையின் இருபுறமும் விபத்து தடுப்பு சுவா் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி சாலையோரத்தில் விபத்து தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.ராம்தாஸ், சந்தையடி.

அதிகாரிகளின் அலட்சியம்

நாகர்கோவில் வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பஸ்களின் வழித்தட எண் மற்றும் பயண நேரம் ஆகியவை அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளது. வடசேரியில் இருந்து நெல்லை மாவட்டம் செட்டிகுளத்துக்கு பல ஆண்டுகளாக 3 'பி' என்ற பஸ் சுசீந்திரம், மயிலாடி, அஞ்சுகிராமம் வழியாக செல்கிறது. ஆனால், அந்த பலகையில் 3 'டி' என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தவறான பஸ்சில் ஏறி சிரமப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான பஸ் வழித்தட எண்ணை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், பண்ணையூர்.

சீரான குடிநீர் தேவை

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் சிவசுடலைமாடன் சாமி கோவில் சாலை உள்ளது. இந்த சாலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிக்காக வந்த ஊழியர்கள் சரியாக சீரமைக்காமலும், பள்ளத்தை முறையாக மூடாமலும் சென்று விட்டுள்ளனர். இதனால், குடிநீர் வினியோகம் தடைபட்டதால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் இணைப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினோத், வல்லன்குமாரன்விளை.

சேதமடைந்த சாலை

குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு அருவிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மேத்யூ டி ஜான், பொன்மனை.

குளத்தை தூர்வார வேண்டும்

வெள்ளிமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வறுக்கத்தட்டு பகுதியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரைகள் வளர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.கதிரவன், வறுக்கத்தட்டு.


Next Story