தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

தார்சாலை அமைக்க வேண்டும்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் தளபதிசமுத்திரம் கீழசண்முகபுரம் கிராமத்தில் தார்சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அவலம் உள்ளது. எனவே, இந்த பகுதியில் உடனடியாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

தனபால், கீழசண்முகபுரம்.

ஊருக்குள் பஸ் வந்து செல்லுமா?

திசையன்விளையில் இருந்து முடவன்குளம் வழியாக கைலாசபேரிக்கு தடம் எண் 573 அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சை நம்பிதான் இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தனர். ஆனால், சமீப காலமாக பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் மாணவர்கள், வியாபாரிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த பஸ்சை முறையாக ஊருக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இசக்கிதாசன், கைலாசபேரி.

கடந்தை வண்டுகளை அகற்ற வேண்டும்

நெல்லை மாவட்ட லோக் அதாலத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை ஆண்கள் பகுதியில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி உள்ளது. இதனால் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே, கூடுக்கட்டி உள்ள கடந்தை வண்டுகளை அகற்ற கேட்டுக் கொள்கிறேன்.

மைக்கேல், முக்கூடல்.

வழிகாட்டி பலகையால் பயணிகள் குழப்பம்

ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் அருகில் வைக்கப்பட்டு உள்ள வழிகாட்டி பெயர் பலகையில் இடையன்குடிக்கு 28 கிலோ மீட்டர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் அருகில் வள்ளியூர் ரோட்டில் வைக்கப்பட்டு உள்ள உயர்மட்ட வழிகாட்டி பலகையில் இடையன்குடிக்கு 17 கிலோ மீட்டர் என்று உள்ளது. இது பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்ய வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ்கள் நின்று செல்லுமா?

வீரவநல்லூர் மோர்மடத்து பஸ் நிறுத்தத்தில் ஒரு சில பஸ்களே நின்று செல்கிறது. இதனால் அங்கு பஸ்சுக்காக பயணிகள் வெகு நேரம் காத்திருக்கிறார்கள். எனவே, அந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இசக்கிதாய், வீரவநல்லூர்.

நோய் பரவும் அபாயம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னதம்பி நாடார்பட்டியில் குடிநீர் குழாய் அருகில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் முறையாக வாறுகால் வசதி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

சந்தியா, சின்னதம்பி நாடார்பட்டி.

பழுதடைந்த கிணறு

கீழக்கடையம் ரெயில் நிலையம் அருகே கேளையாபிள்ளையூர் கிராமம் மேலத்தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் வசதிக்காக கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிணறு பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கிறது. இதில் பலர் குப்பைகளை கொட்டுவதாலும், தீவைத்து எரிப்பதாலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

காளீஸ்வரி, கேளையாபிள்ளையூர்.

வாறுகால் அமைக்க வேண்டும்

கடையம் ஒன்றியம் சேர்வைக்காரன்பட்டி 8-வது வார்டு செக்கடியூரில் பொதுமக்கள் இறுதிச்சடங்கிற்கு பயன்பெறும் வகையில் அருணாசலம்பட்டி காமராஜ் சிலை அருகே கிணறு உள்ளது. தற்போது, இந்த பகுதியில் கழிவுநீர் சாக்கடை தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. ஆகையால் அந்த பகுதியில் கழிவுநீர் வாறுகால் அமைத்து பாதையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

முத்துராஜா, செக்கடியூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

பாவூர்சத்திரத்தில் காமராஜர்நகர் வடக்கு பகுதியில் வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள சாலை சிமெண்டு சாலையாக விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இதில் பாதி அளவு சாலை போடப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிக்கு முதற்கட்ட பணிகள் நடைபெற்று அப்படியே கிடப்பில் உள்ளன. இதனால் சாலையில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மனோ, பாவூர்சத்திரம்.

பொதுமக்கள் அவதி

கடையநல்லூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை பள்ளிக்கூட தெரு பொது மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. இதில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த தெருவில் நடப்பதற்கு சிரமப்படுகிறார்கள். மேலும் தோண்டப்பட்ட குழியில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குழியை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அன்னக்கிளி சாதிக், கடையநல்லூர்.


Next Story