புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை குவியல்
சிவகங்கை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகள் குப்பை குவியல்களாக காணப்படுகிறது. தேங்கும் குப்பைகளில் பெரும்பாலும் மக்காத குப்பைகளே அதிக அளவில் கொட்டப்படுகிறது. மேலும் சிலர் குப்பைகளை எரியூட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே வீதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
குடிநீர் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழராங்கியம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே நீர்தேக்க தொட்டி அமைத்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து கீழராங்கியம் விளக்கிற்கு ஒரு குழாய் அமைத்து அதன் மூலம் நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குமார், மானாமதுரை.
சேதமடைந்த மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பொதுகழிப்பறைக்கு எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்து நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லு]ம் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே இந்த சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், காரைக்குடி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. மேலும் அவைகள் ஆடுகளையும் கடித்து கொன்று விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாஜி, எஸ்.புதூர்.
பயணிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுத்தம் செய்யாமல் உள்ளதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால், சிங்கம்புணரி.