தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
கால்வாய் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராஜசிங்கமங்கலத்தில் விவசாயிகளின் பாசன வசதிக்காவும், பொதுமக்களின் நீர் பயன்பாட்டிற்காகவும் பெரிய கண்மாய் உள்ளது. இந்நிலையில் இந்த கண்மாயில் உள்ள 8மற்றும்9 வது கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. மழை பெய்தால் கால்வாய் நிரம்பி நீரானது ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 2கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜசிங்கமங்கலம்.
வவ்வால் தொல்லை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் எண்ணற்ற பொதுமக்கள், போலீசார் வருவார்கள். இந்நிலையில் இந்த அலுவலக கட்டிடத்தில் வவ்வால்கள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மாலையில் பொதுமக்களின் தலைக்குமேல் இவை பறப்பதால் அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உலாவும் வவ்வால்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்ருதீன், ராமநாதபுரம்.
குறைந்த அழுத்த மின்சார வினியோகம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓட்டப்பாலம் முருகன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்ததில் மின்சாரமானது வினியோகிக்கப்படுகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும்.
மீனாட்சி சுந்தரம், பரமக்குடி.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதி சிகில் ராஜவீதி பெரிய பள்ளிவாசல் ஊருணியை இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தேவைக்களுக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊருணியை ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
கோளாறு நீக்கப்படுமா?
ராமநாதபுரம் நகராட்சியில் வீட்டு வரி மற்றும் பாதாள சாக்கடை வரியை கட்ட வரும் பொதுமக்கள் சர்வர் கோளாறால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் பெரியவர்கள், பெண்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் பல மணி நேரம் காத்திருந்தும் வரி பணத்தை கட்ட முடியாமல் திரும்பி செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சர்வர் கோளாறை சரிசெய்ய வேண்டும்.
செல்வேந்திரன், ராமநாதபுரம்.