தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

பஸ் வசதி வேண்டும்

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனிக்கு அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. மேலும் மாலை 6 மணிக்கு பிறகு தனியார் பஸ்களும் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ்கள் முறையாக வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகநாதன், கனரா வங்கி காலனி.

பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஸ்நிறுத்தத்தின் தென்புறம் அமைந்துள்ள ஊர் பெயர் பலகை முழுவதுமாக உடைந்துள்ளது. இதனால் புதிதாக அந்த வழியாக வரும் பயணிகளுக்கு ஊரின் பெயரை தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே பெயர் பலகையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவில் மேல தெருவின் இறக்கத்தில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அடைப்புகளை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அய்யப்பன், கொக்கிரகுளம்.

மிதமான வேகத்தில் பஸ்கள் செல்லுமா?

நெல்லை பிராஞ்சேரி முதல் வெள்ளாங்குளி வரை சாலை விரிவாக்க பணிகள் சரியாக முடியாமல் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதற்கிடையே தூசி பறக்கும் நிலையில் பஸ்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் பஸ்சின் உள்ளே பின்பக்க வரிசையில் பயணிப்பவர்கள் மட்டுமன்றி இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை குலைந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த பகுதியில் பஸ்களை மிதமான வேகத்தில் ஓட்டிச் செல்வதற்கு டிரைவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்துவார்களா?

ரவிச்சந்திரன், பத்தமடை.

அபாய நிலையில் மின்கம்பம்

நாங்குநேரி தாலுகா களக்காடு அருகே மூங்கிலடி கிராமம் தெற்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி மோதியதில் மின்கம்பம் பாதியாக உடைந்தது. பின்னர் அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் அந்த மின்கம்பத்துக்கு அடியே காங்கிரீட் போடப்படாமல் வெறுமனே மண்ணைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படாததால் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் செல்வதற்காக ஒரு குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழாயை இணைக்காமல் அப்படியே மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

செல்வதாசன், மூங்கிலடி.

மண்ணில் புதையும் அடிபம்பு

நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கில் சாலையோரம் உள்ள அடிபம்பு, சாலை பணிக்காக தோண்டி போடப்பட்ட மண்ணில் புதைந்த வண்ணம் உள்ளது. அந்த அடிபம்பு தண்ணீர் உப்பு தண்ணீராக இல்லாமல் நல்ல குடிநீர் போன்று இருந்ததால் அப்பகுதி மக்களின் தாகம் தீர்த்து வந்தது. எனவே அடிபம்பை மண்ணை போட்டு மூடிவிடாமல் அதற்கு பாதுகாப்பாக தடுப்புகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சக்தி, நல்லூர்.

சாலையின் நடுவே மின்கம்பம்

ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபாலசமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சாலையின் நடுவே இருப்பதால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், பூபாலசமுத்திரம்.

பஸ் வசதி

ஆலங்குளத்தில் இருந்து தினமும் மாலை 4.30, 6 மணிக்கு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் முன்பு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் இயக்கப்படாததால் 6 மணிக்கு செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே முன்பு போல் அந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சந்திரசேகர், ஆலங்குளம்.

நூலகம் திறக்கப்படுமா?

கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இந்த நூலகம் பூட்டப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது வரை இந்த நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பூட்டிக்கிடக்கும் நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருக்குமரன், கடையம்.

சிமெண்டு ரோடு வசதி

சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 8-வது வார்டு ராஜகணபதி கோவில் தெருவில் சிமெண்டு ரோடு அமைத்து 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தற்போது ரோடு பழுதடைந்து இருப்பதால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் முறையான வாறுகால் வசதியும் இல்லாததால் கழிவுநீரும் தேங்குகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மாரியப்பன், கரிவலம்வந்தநல்லூர்.


Next Story