தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
நெல்லை சந்திப்பில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீபுரத்தில் சாலையோரம் பாதாள சாக்கடை மூடியில் இரும்பு பட்டை பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுபற்றி வாசகர் முகம்மது அய்யூப் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினை
நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் பகுதி ஆகும். இந்த பேரூராட்சி பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். முறையாக இணைப்பு பெற்றவர்களுக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக அனுமதி பெறாத குடிநீர் குழாய்களை அகற்றி பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மணிகண்டன், கடம்பன்குளம்.
பாலம் அமைக்க வேண்டும்
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணியில் படித்துறை பகுதியில் ஈமச்சடங்கு செய்வதற்காக கருமாதி மண்டபம் உண்டு. இந்த மண்டபம் செல்ல ஒரு கல் பாலம் இருந்தது. இந்த பாலம் உடைந்து, ஈமச்சடங்கு செய்ய, மக்கள் உபயோகப்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே அந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும்.
-சண்முகசுப்பிரமணியன், நெல்லை.
தடுப்பு சுவர் இல்லாத பாலம்
திசையன்விளை தாலுகா உருமன்குளம்-ரம்மதபுரம் இடையே உள்ள பாலத்தில் தடுப்பு சுவர் இல்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பாலத்தின் கரையில் நிலைதடுமாறி ஓடையில் விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகிறேன்.
-சுடலைமணி, ரம்மதபுரம்.
அறிவிப்பு பலகை தேவை
நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் வழியில் ஒரு ஓட்டல் அருகில் நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார், வேகத்தடை அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். அந்த பலகை கீழே விழுந்து விட்டது. அந்த பகுதியில் வாகனங்களில் வருவோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுகிறார்கள். எனவே அறிவிப்பு பலகை அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ஐகோர்ட் மகாராஜா, நெல்லை.
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூர் செல்லும் சாலையில் தாயார்தோப்பு வரையிலான ரோடு குண்டும், குழியுமாக இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்தவர்களுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ஆலங்குளம் தையல்நாயகி மார்க்கெட் சாலை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலையாகும். இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாைலயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிேறாம்.
-சுரேஷ் சொக்கலிங்கம்.
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு வாஞ்சிநாதன் சிலை முன்பு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த பல மாதங்களாக ஒளிரவில்லை. இதனால் இந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை மீண்டும் ஒளிரவைக்க வேண்டுகிறேன்.
-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
பல்லாங்குழி சாலை
கீழப்பாவூர் ஒன்றியம் திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படால் பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் விபத்தில் சிக்குவது தினசரி வாடிக்கையாகி விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானப்பிரகாசம், பூவனூர்.