தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் ஊராட்சி செம்பிகுளம் கிராமத்தில் சாலையோரத்தில் மின்மாற்றி அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.
பொன்ராஜ், செம்பிகுளம்.
பொது சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கடம்பன்குளம் கிழக்கு பகுதியில் பொது சுகாதார நிலையம் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே இந்த பகுதியில் பொது சுகாதார நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மணிகண்டன், கடம்பன்குளம்.
பொதுமக்கள் அவதி
நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பெருமாள்நகர் சின்னமூலைக்கரைப்பட்டி சின்டெக்ஸ் தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பு மோட்டார் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மோட்டார் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த மோட்டாரை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிமுத்து, பெருமாள்நகர்.
தெருவிளக்கு தேவை
ராதாபுரம் யூனியன் ஆத்துக்குறிச்சி கலையரங்கம் முதல் பிள்ளையார் ேகாவில் பகுதி வரை மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அதில் தெரு விளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுப்பையாதாஸ், ஆத்துக்குறிச்சி.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
பாளையங்கோட்டை மகாராஜநகர் இ.பி.காலனி முதலாவது மெயின் ரோட்டில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் இந்த மின்கம்பிகளின் அருகில், குழந்தைகள் விளையாடும் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.
போக்குவரத்துக்கு இடையூறு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் மின்கம்பத்தின் ஸ்டே ஒயர் (இழுவை கம்பி) இருப்பதை இடம் மாற்றாமல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்இழுவை கம்பியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
முருகன், குலசேகரபட்டி.
சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் பகுதியைச் சுற்றி பூவன்குறிச்சி, காசி விஸ்வநாதபுரம், இந்திரா காலனி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், பங்களா குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள துணை சுகாதார நிலையம் பழமையானதாகும். எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
நாய்கள் தொல்லை
செங்கோட்டை நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டிச் சென்று கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையின் குறுக்கே நாய்கள் படுத்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
கனியமுதன், செங்கோட்டை.
நிழற்கூடப்பணி விரைவுபடுத்தப்படுமா?
ஆய்க்குடியில் நிழற்கூடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்த பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறிச்செல்கிறார்கள். எனவே இந்த பணிைய விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தமிழ்செல்வம், ஆய்க்குடி.
குளத்தின் சுவரில் விரிசல்
மேலப்பாவூர் கிராமத்தில் குளத்தின் கரையில் மதகுகளில் நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் மடையில் பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜ், மேலப்பாவூர்.