தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கையில் இருந்து இடையமேலூர், கண்டங்கிபட்டி வழியாக தமறாக்கி செல்லும் வழியாக மாலை நேரங்களில் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் சார்பாக வலியுறுத்துகிறோம்.
சூர்யா, கண்டாங்கிப்பட்டி.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கிருங்காக்கோட்டை விலக்கு அருகே அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் சாலையில் பயணிக்க வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சிக்னல் விளக்கு அமைத்து போக்குவரத்து காவலர்கள் மூலம் சீரான வாகன போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜாபர் அலி, சிங்கம்புணரி.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ.காலனி அருகே குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பையால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் குப்பைகளை சிலர் எரிப்பதால் சுற்றச்சூழல் மாசடைவதுடன், தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
பயணிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதிய நேரங்களில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜாராம், சிவகங்கை.
வாகனஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையில் உண்டாகும் புழுதி காற்றின் காரணமாக வாகனஓட்டிகள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீ, மானாமதுரை.