'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பன்றிகள் தொல்லை
கண்டமனூர் பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை கழிவுநீரில் புரண்டு விட்டு அப்படியே குடியிருப்பு பகுதியில் உலாவருகின்றன. மேலும் வீடுகளுக்கு உள்ளேயும் நுழைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு, பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகள் தொல்லையை தடுக்க வேண்டும்.
-சீனிவாசன், கண்டமனூர்.
பஸ் போக்குவரத்து மாற்றப்படுமா?
மதுரை, தேனி, நத்தம் பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பஸ்கள் நாகல்நகர் ரவுண்டானா, மேம்பாலம், மெங்கில்ஸ் சாலை, ஸ்கீம் சாலை வழியாக பஸ் நிலையம் சென்றடைகிறது. இந்த பாதையில் அபாய வளைவுகள், ஒரு வளைவில் டிரான்ஸ்பார்மர் என பஸ்கள் ஆபத்தான பாதையில் செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் போக்குவரத்தை மாற்ற வேண்டும்.
-பொதுமக்கள், திண்டுக்கல்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தேனி பங்களாமேடு திட்ட சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை தின்ன வரும் நாய்கள் சண்டையிட்டபடி சாலையின் குறுக்காக ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் குப்பைகள் கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.
-விக்னேஷ், தேனி.
சேதம் அடைந்த பஸ்கள்
தேனியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பச்சை நிற அரசு பஸ்கள் பல சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் சாரல் மழை பெய்தால் கூட பெரும்பாலான பஸ்கள் ஒழுகுகின்றன. பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் பஸ்களை சீரமைக்க வேண்டும்.
-திரவியம், தேனி.
சாலை ஓரத்தில் கழிவுநீர்
பழனி சண்முகநதி அருகே சாலையின் ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கிய பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பக்தர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கேஷ்வரன், பழனி.
சேறும், சகதியுமான தெரு
ஆண்டிப்பட்டி 12-வது வார்டு சீனிவாசாநகர் தெருவில் சாலை வசதி இல்லை. மண் பாதையாக இருப்பதால் மழைக்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. எனவே தார்சாலை அல்லது சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.
-தவசிலிங்கம், ஆண்டிப்பட்டி
அங்கன்வாடி சுவர் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு பக்க சுவர் சேதம் அடைந்து விட்டது. மழைக்காலமாக இருப்பதால் ஈரப்பதம் ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் குழந்தைகளை அனுப்பும் நிலை உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.
-பிரவீன், கசவனம்பட்டி.
எரியாத தெருவிளக்கு
வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் 3 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
-சாராம்மாள், முத்துதேவன்பட்டி.
குப்பைகள் அகற்றப்படுமா?
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்த சின்னையாபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. மழைக்காலமாக இருப்பதால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-ராமன், ஆர்.எம்.காலனி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் மழைநீர் சேமிப்பு குளத்தின் அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால், குளத்தின் கரையில் மக்கள் நடைபயிற்சி செய்ய முடியவில்லை. சாக்கடை கால்வாயில் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.