தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

எரியாத தெரு விளக்குகள்

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இ.டபிள்யூ.எஸ். குடியிருப்பு பகுதியில் சுமார் 10 தெருவிளக்குகள் கடந்த 15 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஈனமுத்து, பாளையங்கோட்டை.

சாலையை சீரமைக்க வேண்டும்

திசையன்விளை அப்புவிளை காமராஜர் நகர் 1-வது தெருவில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இந்த சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

இம்மானுவேல், திசையன்விளை.

தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீர்

நெல்லை டவுன் சுந்தரர் தெருவின் நுழைவு வாயில் சாக்கடை நீர் நிரம்பி தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீராம், டவுன்.

வாகன ஓட்டிகள் குழப்பம்

திசையன்விளை-நாங்குநேரி சாலையில் குமாரபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை எதுவும் இல்லை. இதுவாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?

களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட வடமலைசமுத்திரம் புட்டாரத்தி அம்மன் கோவில் எதிரே உள்ள சாலை மண் சாலையாக இருக்கிறது. இந்த சாலையில் பேவர் பிளாக் கற்கள் அல்லது தார் போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கணேசன், பத்மநேரி.

குண்டும், குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கோட்டை வடிவிலான ஆர்ச் உள்ளது. இந்த சாைல வழியாகத்தான் நகருக்குள் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. தற்போது, இந்த சாலையானது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கனியமுதன், செங்கோட்டை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

ஆலங்குளத்தில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு மாலை 5 மணி அளவில் அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அருண், ஆலங்குளம்.

வாகன ஓட்டிகள் அவதி

கழுகுமலை முருகன் ேகாவிலுக்கு திருவேங்கடம், குருவிகுளத்தில் இருந்து அத்திப்பட்டி வழியாக பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கவின் செல்வா, திருவேங்கடம்.

பஸ் நிலையத்திற்குள் பேருந்துகள் வருமா?

திருவேங்கடத்தில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால், பஸ் நிலையத்தில் பேருந்துகள் வராமல் பஜாரிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் பஸ் நிலையம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, பஸ் நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நவநீத்கிருஷ்ணன், குருவிகுளம்.

ஆபத்தான மின்கம்பம்

திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் வடக்கு பஞ்சாயத்து 8-வது மண்டகபடி தெருவில் ரேஷன் கடை எதிரே உள்ள மின்கம்பம் மற்றும் அதே பகுதியில் தீப்பெட்டி ஆலை அருகே உள்ள மற்றொரு மின்கம்பம் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் ஆபத்தான இந்த மின்கம்பங்களை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

கணேசன், திருவேங்கடம்.


Next Story