'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விடுதியின் நுழைவுவாயில் சேதம்

தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள அரசு மாணவிகள் விடுதியின் நுழைவுவாயில் கேட் சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் நுழைவுவாயில் அருகே செடிகள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே மாணவிகளின் நலன்கருதி நுழைவுவாயில் கேட்டை சீரமைத்து, செடிகளை அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், கோட்டூர்.

வேகத்தடை அவசியம்

திண்டுக்கல் நேருஜிநகரில் வங்கி அருகே நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கிறது. அந்த இடம் வளைவான பகுதியாக இருந்தாலும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெரிசல் மற்றும் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

-முகமதுஅலி ஜின்னா, திண்டுக்கல்.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

தேனியை அடுத்த ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அனுகிரகாநகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதாகி விட்டது. இதனால் அனுகிரகாநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க வேண்டும்.

-குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அனுகிரகாநகர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

பெரியகுளம் தாலுகா காமக்காபட்டி அருகே அம்சாபுரத்தில் உயர்அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. வாகனங்களில் பாரம் ஏற்றி செல்லும் போது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், அம்சாபுரம்.

குளத்தில் மிதக்கும் குப்பைகள்

பெரியகுளம் தாலுகா சருத்துபட்டி குளத்தில் குப்பைகள், கழிவுகள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும் பாசி படர்ந்து குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. எனவே குளத்தில் மிதக்கும் குப்பைகள், பாசியை அகற்ற வேண்டும்.

-அபினேஸ்வரன், கோம்பை.

வீணாக செல்லும் குடிநீர்

கம்பம் கிராமசாவடி தெருவில் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறுகிறது. மேலும் தெருவில் ஓடை போன்று குடிநீர் வீணாக செல்கிறது. குடிநீர் வீணாகுவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-குமரேசன், கம்பம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலம் அருகே ரெயில் நிலையம் செல்லும் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் சாலையாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

அபாய குடியிருப்புகள்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வீட்டு வசதி வாரியத்தின் பழமையான குடியிருப்புகள் இடிக்கப்படாமல் உள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் சேதம் அடைந்து அபாய நிலை காட்சி அளிக்கிறது. மழைக்காலமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பயன்படாத அபாய குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

இருள் சூழ்ந்த குளத்து சாலை

பழனி குளத்து சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சிலநாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-முருகேசன், பழனி.

பாலம் கட்டித்தர வேண்டும்

பழனி தாலுகா நெய்க்காரப்பட்டியை அடுத்த ராசாபுரத்தில் மயானத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே ஆறு செல்கிறது. மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும்.

-மாவீரன், நெய்க்காரப்பட்டி.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story