புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்தி கடிப்பதால் சிலர் காயமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாட்டரசன்கோட்டை.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளை எரியூட்டுகின்றனர். அதன் மூலம் வெளிவரும் காற்றை சுவாசிப்பதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் தேங்குவது மற்றும் எரியூட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலாவுதீன், மானாமதுரை.

பொதுமக்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் ஒடுவன்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் குரங்குகள் வீட்டினுள் புகுந்து அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்கிறது. எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பாலா, ஒடுவன்பட்டி.

நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு வரும் மாணவிகள் பெரும்பாலும் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லை. இதனால் மாணவிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சைக்கிள் நிறுத்த இடவசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பத்தூர்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாமியார் ஊரணி நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் அச்சஉணர்வுடனே பயணித்து வருகின்றனர். எனவே சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.


Next Story