புகார் பெட்டி
புகார் பெட்டி
நடவடிக்கை தேவை
குளச்சல் நகராட்சியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் எதிர்புறம் அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும்இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கு பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
குடிநீர் வசதி தேவை
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடுகன்பற்று பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இந்த மையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மையத்தில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
எரியாத தெருவிளக்கு
நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை சந்திப்பில் இருந்து தெங்கம்புதூர் செல்லும் கால்வாய் கரை சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையிலும், அதில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் இரவு நேரம் சாலையில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சாய்ந்த மின்கம்பதை சீரமைத்து, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், வேதநகர்.
சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் பள்ளிவிளையில் டவுண் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்திலுள்ள விளக்கு அருகில் உள்ள மரத்தை நோக்கி எரிகிறது. இதனால், சாலையில் வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மின்விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டோ, நாகர்கோவில்.
பாசி படர்ந்த சாலை
திக்கணங்கோடு பஞ்சாயத்தில் சிவன் கோவில் மகாதேவர் குளத்தின் மேற்கு பகுதியில் இருந்து வாழவிளை செல்லும் கான்கிரீட் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே விவசாய நிலத்தில் இருந்து சாலையில் தண்ணீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், சாலையில் பாசி படர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜூ, திக்கணங்கோடு.
வீணாகும் குடிநீர்
திக்கணங்கோடு-கருங்கல் சாலையில் சாலையின் நடுவே சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சாலையில் மத்திகோடு, மானான்விளை, குறும்பனை திருப்பம் உள்ளிட்ட இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எட்வின்ஜோஸ், மத்திகோடு.