'தினத்தந்தி' புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்துவிட்டது. இதனால் மழை காலமாக இருப்பதால் பயணிகள் அச்சத்துடன் நிழற்குடைக்குள் அமரும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகநாதபாண்டியன், வயல்பட்டி.

சாக்கடை கால்வாய் அடைப்பு

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் இருந்து பாரதிபுரத்துக்கு திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் கால்வாயை விட்டு வெளியேறி சாலையில் ஓடுகிறது. பள்ளி செல்லும் மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜகன்னி, நாகல்நகர்.

பள்ளி மாணவ-மாணவிகள் தவிப்பு

பெரியகுளத்தை அடுத்த தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரவில் மர்ம நபர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் மதுபாட்டில்களை அங்கே வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் பள்ளி வளாகத்தையும் அசுத்தம் செய்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமடைந்து வருகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், தாமரைக்குளம்.

சீரான குடிநீர் வினியோகம்

திண்டுக்கல் நாகல்நகர் திருமலைசாமிபுரம் பகுதியில் மிகவும் குறைந்த நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-பாலன், திண்டுக்கல்.

குப்பை அள்ளும் நேரம் மாற்றப்படுமா?

திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் 2 பள்ளிகள் உள்ளன. இதனால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். அந்த நேரத்தில் சாலை ஓரத்தில் வண்டிகளை நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு இதர நேரத்தில் குப்பைகளை அள்ள வேண்டும்.

-குமார், பாலகிருஷ்ணாபுரம்.

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு

கடமலைக்குண்டு கிராமத்தில் ஒருசிலர் வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீரை திருடுகின்றனர். இதனால் மோட்டார் பயன்படுத்தாத வீடுகளில் சரியாக குடிநீர் வருவதில்லை. விலைக்கு குடிநீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை தடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

எரியாத தெருவிளக்குகள்

ஆத்தூர் ஒன்றியம் அக்கரைபட்டியில் குடகனாறு பாலத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதியே இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. அந்த தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

-கண்ணன், அக்கரைபட்டி.

பாலம் கட்டித்தர வேண்டும்

கடமலைக்குண்டு அருகே கொங்கரவு கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிறிய ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் மீது பாலம் கட்டப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் மக்கள் மாற்றுப்பாதையில் செல்லும் நிலை உள்ளது. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும்.

-பொதுமக்கள், கொங்கரவு.

அபாய மின்கம்பம் மாற்றப்படுமா?

திண்டுக்கல்லை அடுத்த வெள்ளோடு ஊராட்சி கல்லுப்பட்டியில் பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் பலத்த காற்று, மழையின் போது மின்கம்பம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.

-பாலமுருகன், கல்லுப்பட்டி.

குடிநீர் குழாய் உடைப்பு

உத்தமபாளையத்தில் இருந்து சின்னமனூர் செல்லும் சாலையின் ஓரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-அய்யனார், கோம்பை.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story