'தினத்தந்தி' புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சேதமடைந்த சாலை

திண்டுக்கல் ஏ.கே.எம்.ஜி.நகர் 5-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்குவதால் குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-மதுரைவீரன், திண்டுக்கல்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் இருந்து கோம்பைக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், கோம்பை.

சாலையோரத்தில் குவியும் குப்பை

தேனி-தேவாரம் சாலையில் உப்புக்கோட்டை பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், உப்புக்கோட்டை.

மாடுகள் கட்டும் இடமான கலையரங்கம்

சிறுமலையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி கலையரங்கம் பயன்பாடு இன்றி விடப்பட்டது. இதனால் தற்போது அது மாடுகளை கட்டி வைக்கும் கொட்டகையாக மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலையரங்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், சிறுமலை.

சாலை அமைக்க வேண்டும்

தாடிக்கொம்புவை அடுத்த காப்பிளியப்பட்டியில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழரசன், காப்பிளியப்பட்டி.

தடுப்புச்சுவர் சேதம்

கடமலைக்குண்டு ஈஸ்வரன் கோவில் அருகே வைகை ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு இடிந்து விழுந்தால் ஆற்று தண்ணீர் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், கடமலைக்குண்டு.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

பொன்னம்மாள்பட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மயானத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், பொன்னம்மாள்பட்டி.

நிறம் மாறிய கண்மாய் நீர்

கொடைரோடு அருகே பள்ளப்பட்டி அகரன்குளம் கண்மாயில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தண்ணீர் கருமை நிறத்துக்கு மாறியது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். எனவே கண்மாய் நீரை சுத்திகரிப்பதுடன், கழிவுகளை கண்மாயில் கலப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், பள்ளப்பட்டி.


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story