'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளுக்கு தீவைப்பு
திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகே கிடந்த குப்பைகளை அகற்றாததால், தீவைத்து எரிக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறும் புகையால் முதியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
சாலையில் பள்ளம்
திண்டுக்கல் நாகல்நகர் அரண்மனைகுளத்தின் கரையில் உள்ள மதுரை சாலையில், சில இடங்களில் சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி விட்டது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
-குமார், நாகல்நகர்.
சேதம் அடைந்த மின்கம்பம்
ஆத்தூர் நாயுடுதெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டுபூச்சுகள் உதிர்ந்து விட்டதால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் நடவேண்டும்.
-மணிகண்டன், ஆத்தூர்.
தார்சாலை அமைக்க வேண்டும்
வேடசந்தூர் தாலுகா சத்யநாதபுரத்தில் உள்ள சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டது. சாலை முழுவதும் மேடு, பள்ளமாக காட்சி அளிப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
-நாகலிங்கம், சத்யநாதபுரம்.
எரியாத தெருவிளக்கு
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை அடுத்த ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரைஸ்மில் தெருவில் ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் விநாயகர் கோவிலில் இருந்து மயானம் வரையிலான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூமிநாதன், நாராயணதேவன்பட்டி.
கண்மாய் தூர்வாரப்படுமா?
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை அடுத்த கோவில்பாறை கண்மாய் புதர்மண்டி காணப்படுகிறது. கண்மாயில் பல பகுதிகள் மேடாக மாறிவிட்டன. இதனால் மழைக்காலத்தில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போய்விடும். எனவே கண்மாயை தூர்வார வேண்டும்.
-பொதுமக்கள், கோவில்பாறை.
சாக்கடை கால்வாய் பணி
ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாதபுரம் குறுக்குத்தெருவில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல், தேங்கி நிற்கிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
-பொதுமக்கள், எஸ்.ரெங்கநாதபுரம்.
சேதமடைந்த சாலை
பழனி இட்டேரிசாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.
--------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
--------