புகார் பெட்டி
புகார் பெட்டி
ஆபத்தான நிலையில் நீர்த்தேக்க தொட்டி
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து கழுநீர்குளம் தெற்கு, கழுநீர்குளம் வடக்கு, அம்பேத்கர் நகர், காமராஜ்நகர், சீவலசமுத்திரம், இந்திராநகர் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த தொட்டியில் உள்ள தூண்கள் அனைத்திலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- மனோ, பாவூர்சத்திரம்.
தண்ணீர் தராத அடிபம்பு
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு திருமலைெகாழுந்து தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் அடிபம்பை சரிசெய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- பவித்ரன், ஆழ்வார்குறிச்சி.
பூட்டிக்கிடக்கும் நூலகம்
கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நூலகம், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் நூலகத்துக்கு செல்ல வேண்டுமானால், அருகில் உள்ள மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி, பூட்டிக்கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்.
- திருக்குமரன், கடையம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
வீரகேரளம்புதூர் தாலுகா குலையனேரி பஞ்சாயத்து துரைச்சாமிபுரம் ஏ.டி.காலனியில் மழை காலத்தில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே தேங்குவதால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஆகவே வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வேண்டுகிறேன்.
- பால்ராஜ், ஏ.டி.காலனி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கடையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து முதலியார்பட்டி ரெயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. அங்கு சாலையோரம் அறிவிப்பு பலகை வைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கண்ணன், கேளையாப்பிள்ளையூர்.