'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பள்ளி முன்பு தேங்கும் கழிவுநீர்

தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. அதை கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. மாணவர்களின் சுகாதாரம் கருதி, பள்ளியின் முன்பு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஈஸ்வரன் தங்கராஜ், அம்மச்சியாபுரம்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

சாணார்பட்டி ஊராட்சியில் வீரசின்னம்பட்டி செல்லும் சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலைஉள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.

-பொதுமக்கள், வீரசின்னம்பட்டி.

தூர்வாராத சாக்கடை கால்வாய்

கம்பம் நகராட்சி 29-வது வார்டில் ஒருசில தெருக்களில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யனார், கம்பம்.

சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

தோட்டனூத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி பரிதாபமாக காட்சி அளிக்கிறது. எனவே குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

சாலை சீரமைக்கப்படுமா?

தேனி மேல சொக்கநாதபுரம் 8-வது வார்டு பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள சாலை சேதம் அடைந்து பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது. தெருவில் நடந்து செல்பவர்கள் கூட தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயகிருஷ்ணன், மேலசொக்கநாதபுரம்.

மருத்துவமனையில் செயல்படாத லிப்டு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 4 மாடிகள் கொண்ட பிரசவ வார்டில் இருக்கும் லிப்டு பழுதாகி விட்டது. இதனால் நீண்ட நாட்களாக லிப்டு செயல்படாததால் கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்களை கவனிக்க வரும் உறவினர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே லிப்டை சரிசெய்ய வேண்டும்.

-முகமதுஇக்பால், பேகம்பூர்.

பள்ளி அருகே குப்பைகள்

தேவதானப்பட்டியில் இந்து நடுநிலைப்பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.

-மாணவர்கள், தேவதானப்பட்டி.

பேட்டரி கார் வசதி தேவை

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதில் நோயாளிகள், முதியவர்களும் வருகின்றனர். இவர்கள் நடைமேடைகளுக்கு செல்வதற்கு நடைமேடை பாலம், சுரங்கப்பாதையை தான் பயன்படுத்த வேண்டியது இருக்கிறது. இதற்காக படிகளில் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர். எனவே பேட்டரி கார் வசதி செய்து தரவேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

சிறுநீர் கழிப்பிடம் அவசியம்

திண்டுக்கல் நகரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சிறுநீர் கழிப்பிடம் இல்லை. இதனால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடம் அதிகரித்து வருகிறது. இது சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. மேலும் சிறுநீர் கழிப்பிடம் இல்லாமல் பலர் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பிடம் கட்ட வேண்டும்.

-ராஜேஷ், திண்டுக்கல்.

--------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story