புகார் பெட்டி
புகார் பெட்டி
வங்கி கிளை வேண்டும்
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. வாரத்தில் 5 நாட்களும் இட நெருக்கடியால் பணம் கட்டவும், பணம் எடுக்கவும் சிரமப்படுகிறோம். எனவே மற்றொரு வங்கி கிளை அமைக்க வேண்டும்.
-கிருஷ்ணகுமார், வீ.கே.புதூர்.
ரோடு மோசம்
கீழ கடையம் ரெயில் நிலைய ரோடு படுமோசமாக மேடு பள்ளமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரெயில்வே கேட்டின் முன் பள்ளம் தோண்டி உள்ளனர். அதுவும் சீரமைக்கப்படவில்லை. இந்த ரோட்டை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-கண்ணன், கேளையாபிள்ளையூர்.
வேகத்தடையில் வர்ணம் இல்லையே!
தென்காசியில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் மத்தளம்பாறை பகுதியில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வெள்ளை நிற வர்ணம் முற்றிலும் அழிந்து விட்டது. இதனால் அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி வேகத்தடையில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-அம்ஜத், முதலியார்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
வீ.கே.புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் இருந்து கைப்பினான்குளம் செல்லும் குறுக்கு வழிச்சாலை குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிப்படுகிறார்கள். ஆகவே அந்த சாலையை சரிசெய்து தார் ரோடு அமைக்க வேண்டுகிறேன்.
-கணேசன், கீழக்கலங்கல்.
மூடிக்கிடக்கும் பொது கழிவறை
சங்கரன்கோவில் யூனியனுக்கு உட்பட்ட திருவேட்டநல்லூர் கிராமத்தில் பெண்கள் பொது கழிவறை செயல்பாட்டில் இருந்தது. தற்போது அந்த பொது கழிவறை மூடிக்கிடக்கிறது. இதனால் கிராமத்தில் உள்ள பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே திருவேட்டநல்லூர் கிராமத்தில் உள்ள பெண்கள் பொது கழிவறை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்.
-மணிகண்டன், திருவேட்டநல்லூர்.