புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சீரமைக்கப்பட்டது

நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை சந்திப்பில் இருந்து தெங்கம்புதூர் செல்லும் சானல் கரை சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்தும், அதில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு சேதமடைந்தும் காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்வோர் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்து, சேதமடைந்த விளக்கையும் அகற்றி புதிய விளக்கு பொருத்தி எரிய வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேதமடைந்த சாலை

குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொடுப்பைக்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மரு.சு.ராஜன், கேந்தன்குழிவிளை.

வேகத்தடையால் விபத்து

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு-மிடாலக்குளம் சாலை தற்போதுதான் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. சாலை தொடங்கும் மிடாலக்காடு சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வேகத்தடையில் உரசி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் அந்த பகுதியில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையின் உயரத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

-பொன்.சோபனராஜ், மிடாலக்காடு.

சுகாதார சீர்கேடு

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி ஊரில் இரட்டைக்கரை கால்வாய் செல்கிறது. தற்போது இந்த கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், தண்ணீர் வராமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகள், கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் குப்பைகள், கழிவுகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத் ஜி, பேயன்குழி.

சேதமடைந்த சுவிட்ச் பெட்டி

அஞ்சுகிராமம் தெற்கு பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்குக்கான சுவிட்ச் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் மூடி சேதமடைந்து காணப்படுவதுடன் மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹிட்லர், அஞ்சுகிராமம்.

வேகத்தடை தேவை

நாகர்கோவிலில் செம்மாங்குடி சாலை உள்ளது. சாலையில் துணிக்கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் வேகமாக வந்து மீனாட்சிபுரம் சாலையில் திரும்புகின்றனர். இதனால், மீனாட்சிபுரம் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி பொடுமக்கள்விபத்துக்களில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, செம்மாங்குடி சாலையும், மீனாட்சிபுரம் சாலையும் இணையும் பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி.


Next Story