புகார் பெட்டி
புகார் பெட்டி
அகற்றப்பட்டது
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அண்ணாவிகுளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் பாயும் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடந்தது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாய்கள் தொல்லை
நாகர்கோவில் கோட்டார் செந்தூரான்நகரில் இருந்து இந்துகல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டி வருகிறது. எனவே, நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், கோட்டார்.
சீரமைக்க வேண்டும்
தாழக்குடி பேரூராட்சியில் பரதர் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.
பயன்பாட்டுக்கு வருமா?
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுண் பகுதியில் உள்ள பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திறப்பு விழா நடைபெற்றது. அதன்பிறகு அந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது. மேலும், தற்போது கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் அருகில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம், தபால்நிலையம் ஆகியவை தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா?.
-டி.நீலகண்ணன், அஞ்சுகிராமம்.
நடவடிக்கை தேவை
கன்னியாகுமரியை அடுத்த மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவற்றை முறையாக அகற்றுவதில்லை. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை சீராக அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
சுகாதார சீர்கேடு
நல்லூர் ஊராட்சி பகுதியில் கிழக்கு தெரு உள்ளது. இந்த பகுதியில் மாடுகள் வளர்ப்போர் சிலர் அதன் கழிவுகளை சாலையோரம் பொது இடத்தில் கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தீபன் மைக்கேல் ரத்தினம், நல்லூர்.