புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

கொசு தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் 2வது தெரு பகுதியில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயலட்சுமி, கழனிவாசல்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

சிவகங்கை நகர் பஸ்நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய அளவு பஸ்களை இயக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகரை அஞ்சல் புதுக்கோட்டையில் கடந்த சிலநாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டு நிலவுகிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் பம்புகளும் உடைந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து குடிநீர் வினியோகத்தை இப்பகுதியில் சரிசெய்ய வேண்டும்.

வெங்கடேஷ், சிவகங்கை.

பக்தர்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தி வருவதுடன் கடிக்கவும் செய்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வின், இளையான்குடி.

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பாரதி வீதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இக்குரங்குகள் தெருவில் விளையாடும் குழந்தைகளை கடிக்க வருகின்றது.மேலும் வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கின்றது. தொல்லை தரும் குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ், கல்லல்.


Next Story