புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், மானாமதுரை.
ஊருணி தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் பகுதியில் உள்ள கீழ்ஊருணியில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஊருணி நீர் மாசடையும் நிலை உள்ளது. மேலும் ஊருணி தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ்குமார், சிவகங்கை.
நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி, காரைக்குடி.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டத்தின் நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள தண்ணீரால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முரளி, சிவகங்கை.
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்கிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
சீனிவாசன், திருக்கோஷ்டியூர்.