புகார் பெட்டி
புகார் பெட்டி
போக்குவரத்து நெரிசல்
மதுரை கல்பாலத்தில் இருந்து யானைக்கல் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
உதயராஜா, யானைக்கல்.
கழிவுநீர் கலக்கும் அபாயம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கண்மாயானது கருவேலமரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாயில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் கழிவுநீர் கலக்காத வண்ணம் தடுத்து கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரத், திருப்பரங்குன்றம்.
நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் நாய்கள் சுற்றித்திரிகிறது. இவை அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவிகள், குழந்தைகள் ஆகியோரை பார்த்து குறைப்பதால் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
சந்தனகுமார், தாகூர்நகர்.
விபத்து அபாயம்
மதுரை குலமங்கலம் சாலை ஆலங்குளத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலையானது மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். மேலும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் இயங்குவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனடியாக மூடி பெரும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும்.
அபுபக்கர், குலமங்கலம்.
சாலையின் நடுவே கற்கள்
மதுரை காமராஜர் சாலை, நிர்மலாபள்ளி சாலை, பிள்ளையார் கோவில் சாலை ஆகியவற்றின் நடுவே தடுப்புக்காக போடப்பட்ட கற்களை சிலர் நகர்த்தியுள்ளனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகனநெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, காமராஜர் சாலை, மதுரை.
நிறம் மாறிய நிலத்தடி நீர்
மதுரை குருத்தூர் அருகே பாரதிநகரில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீரானது நிறம் மாறி வருகிறது. இந்த நீரை பயன்படுத்தும் இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு நோய்களால் சிரமப்படுகிறார்கள். மேலும் இப்பகுதி குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி நிலத்தடி நீரை ஆய்வுக்கு உ ட்படுத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராகுல், குருத்தூர், மதுரை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாநகராட்சி 54-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி சாலைகளை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி தொற்றுநோய் பரவுவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
கண்மாய் தூர்வாரப்படுமா?
மதுரை கள்ளந்திரி கண்மாய் கருவேலமரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிப்புடன் காணப்படுகிறது. மேலும் சிலரால் குப்பைகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வாரி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம், கள்ளந்திரி, மதுரை
ஒளிராத தெருவிளக்குகள்
மதுரை புதூர் அருகே மூன்றுமாவடி ராமலட்சுமி நகர் மெயின்ரோட்டில் உள்ள தெருவிளக்கு கடந்த சிலவாரங்களாக எரியாமல் உள்ளது. இரவில் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பாதாசாரிகள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிரமப்படுகிறார்கள். அவ்வப்போது சிறு, சிறு அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையில் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத விளக்கை அகற்றி புதிதாக பொருத்த வேண்டும்.
பார்த்திபன், புதூர், மதுரை.
சேறும், சகதியுமான சாலை
மதுரை வில்லாபுரம் சித்தர்தெரு சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மேலும் மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரியப்பன், வில்லாபுரம்.