புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தென்காசி

தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதாக ஞானசேவியர் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக பயணிகளின் பயன்பாட்டுக்கு நவீன கழிப்பறை திறக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

கடையம் யூனியன் தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து புங்கம்பட்டி ஊருணி அருகில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் சுகாதார வளாகத்தில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அருள், புங்கம்பட்டி.

மின்விபத்து அபாயம்

ஆலங்குளம் தாலுகா குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்து காளத்திமடத்தில் உள்ள ரேஷன் கடையில் மின்வயர் இணைப்பு கம்பி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே மின்வயர் இணைப்பு கம்பியை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-முத்துலிங்கம், காளத்திமடம்.

சாலையில் ராட்சத பள்ளங்கள்

கடையத்தில் இருந்து பொட்டல்புதூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பள்ளிவாசல் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.


Next Story