புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

மின்கம்பம் மாற்றப்பட்டது

ஆசாரிபள்ளம் சந்திப்பில் இருந்து மேலப்பெருவிளைக்கு செல்லும் குறுந்தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரான்ஸ்பார்மரின் இரண்டு கம்பங்களும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

கன்னியாகுமரி முருகன்குன்றத்தில் இருந்து சுனாமி காலனி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையோரத்தில் கிடக்கும் குப்பை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், சுனாமிகாலனி, கன்னியாகுமரி.

விபத்து அபாயம்

குலசேகரத்தில் இருந்து திற்பரப்புக்கு செல்லும் சாலையில் உண்ணியூர்கோணம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே சேதமடைந்த குடிநீர் குழாயை அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் சீரமைத்து விட்டு சாலையை சரி செய்யாமல் இரும்பு தடுப்புகளை வைத்தனர். ஆனால், இங்கு தடுப்பு வைத்திருப்பது தெரிவது இல்லை. இதனால், அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உனடியாக சாலையை சீரமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், குலசேகரம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலகம் அருகில் தர்மத்தான்குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு பேயன்குழி இரட்டைக்கரை சானலில் செல்லும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீர் வருவது வழக்கம். தற்போது பேயன்குழி இரட்டைக்கரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், அப்பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் தாழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மிக்கேல், குருந்தன்கோடு.

தூர்வாரப்படுமா?

உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட சாங்கை பகுதியில் இருந்து உண்ணாமலைக்கடைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. தற்போது, இந்த குளம் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?.

-தே.ஜாண் ஜெய்சிங், காஞ்சிரகோடு.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாரிபள்ளம் பெருமாள்நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் முன்தின நாள் மாலையில் எரிய தொடங்கும் விளக்குகள் மறுநாள் காலை 10 ஆனாலும் அணைப்பது இல்லை. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே, வீணாகும் மின்சாரத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமலி சுந்தரராஜ், பெருமாள்நகர், ஆசாரிபள்ளம்.


Next Story