'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிப்பறை வசதி வேண்டும்

ஆத்தூர் தாலுகா அழகர்நாயக்கன்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே கழிப்பறை வசதியை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், அழகர்நாயக்கன்பட்டி.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் உள்ள தெருக்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மாடுகளை தெருக்களில் சுற்றித்திரிய விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, ஆர்.எம்.காலனி.

சேதமடைந்த சாலை

தேனி முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அலுவலக ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றானர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், தேனி.

அள்ளப்படாத குப்பைகள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

குண்டும், குழியுமான சாலை

பழனி பாலாஜி மில் பகுதியில் இருந்து இட்டேரி ரோட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பார்த்திபன், பழனி.

எரியாத மின்விளக்குகள்

பழனி-திண்டுக்கல் சாலையில் சிவகிரிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், சிவகிரிப்பட்டி.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆண்டிப்பட்டியை அடுத்த சுக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். எனவே குழாயை உடனடியாக சரி செய்யவேண்டும்.

-சந்தோஷ், சுக்கம்பட்டி.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

தேனி அருகே சின்னஓவுலாபுரம் ஏ.டி.காலனியில் சாக்கடை கால்வாய் பணிக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம்சுழித்தப்படியே அந்த தெருவை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-சங்கீதா, சின்னஓவுலாபுரம்.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

பெரியகுளத்தை அடுத்த எருமலைநாயக்கன்பட்டியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் அந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், எருமலைநாயக்கன்பட்டி.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------


Related Tags :
Next Story