புகார் பெட்டி
புகார் பெட்டி
வீணாகும் குடிநீர்
சாமியார்மடத்தில் இருந்து வேர்கிளம்பிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து சேதமடைந்த சாலையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
வாகன ஓட்டிகள் அவதி
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட காந்திமுக்கு சந்திப்பில் நம்ம குளச்சல் மின்விளக்கு பொருத்தப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகை போக்குவரத்து இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பதாகையை வேறு இடத்தில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
மின்விளக்கு தேவை
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் அமைக்காததால் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதானல், இரவு நேரம் பஸ்சிற்காக காத்து நிற்கும் பெண்கள் அச்சத்துடனேயே நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிலையத்தில் முகப்பு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன், நாகர்கோவில்.
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
குளச்சல் அடுத்த இரும்பிலி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு வருபவர்கள் மது குடித்து விட்டு நிலைகுலைந்து சாலையில் போக்குரவத்துக்கு இடையூறாக நிற்பதும், இருசக்கரத்தில் செல்லும் பெண்களை மறிப்பதும், சீண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும், தகராறுகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெண்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாய மினி, ஆலஞ்சி.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் பல இடங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீமான், குலசேகரம்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில்-ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையில் இருந்து எள்ளுவிளைக்கு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள ஒரு கோவிலின் அருகில் சாலையோரம் கழீவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. குறுகிய சாலையான இதில் கனரக வாகனங்கள் செல்வதால் கழிவுநீர் ஓடையின் கட்டுமானம் இடிந்து சேதமடைகிறது. இதனால், கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை சீரமைப்பதுடன், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.
-தினேஷ், எள்ளுவிளை.
நடவடிக்கை எடுப்பார்களா?
துவரங்காட்டில் இருந்து மத்தியாஸ் நகருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு தனியார் பள்ளியின் எதிரே சுற்றுச்சுவருடன் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். தற்போது குளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய சாலை பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, விபத்துகள் ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-நாராயணசாமி, பூதப்பாண்டி.