புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

கழிவுகள் அகற்றப்பட்டது

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தின் அருகில் அட்டைக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஓட்டல் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இதனால், துர்நாற்றம் வீசி அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுப்பார்களா?

காப்புக்காடு அருகே மட்டுப்பாவு சந்திப்பில் நீரேற்றத்துக்கான வால்வின் தொட்டி சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மேல் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த கான்கிரீட் சிலாப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

நடவடிக்கை தேவை

திங்கள்சந்தை பகுதியில் ராதாகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பக்தர்களின் தங்கும் விடுதியின் மேற்கூரையும் சீரமைக்கப்படாமல், கழிப்பறைகள் இல்லாமலும் உள்ளது. இதனால், திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகுகின்றனர். எனவே, கோவிலின் சுற்றுச்சுவர், விடுதி மேற்கூரை, கழிப்பறை வசதிகள் என சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த், குளச்சல்.

பாதசாரிகள் அவதி

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளி ரோடு செல்லும் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பம் இருந்த இடத்தில் புதிய மின்கம்பத்தை நட்டனர். ஆனால், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி அதே இடத்தில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்துவார்களா?.

-பாஷீர், குளச்சல்.

சேதமடைந்த மேற்கூரை

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிழற்குடையை கான்கிரீட் கட்டிடமாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

போக்குவரத்துக்கு இடையூறு

தக்கலையில் பஸ்நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். இதனால், பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வரும் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிள் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் எஸ்.ஏ. தெரு உள்ளது. மிகவும் குறுகலாக காணப்படும் இந்த தெருவில் மரக்கிளைகள், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக காணப்படும் மரக்கிளைகள், செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் மைதீன், திட்டுவிளை.


Next Story