புகார் பெட்டி
புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் சிதம்பரநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் திருப்பத்தில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மீது போடப்பட்டு இருந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சிலாப்புகள் அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பழுதடைந்த மின்விளக்கு
நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உயர்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து சீராக எரியாமல் உள்ளது. இதனால், அந்த சந்திப்பு பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கோட்டார்.
கழிவுகள் அகற்றப்படுமா?
பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் பொற்றையடி உள்ள கால்வாய் வழியாக கொட்டாரம் பகுதியில் உள்ள பல குளங்களை சென்றடைகிறது. இந்த கால்வாயில் பல பகுதிகளில் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், தண்ணீர் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
நடவடிக்கை தேவை
கன்னியாகுமரி பேரூராட்சி ஐகிரவுண்டு சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பதாகையை வைத்துள்ளனர். ஆனாலும், சிலர் அங்கு குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகளில் இரைதேடி வரும் தெருநாய்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிஜி, கன்னியாகுமரி.
சேதமடைந்த சாலை
திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கையாலக்கல் தண்ணீர் தொட்டி முதல் ஆற்றுபாலம் வரை சுமார் 600 மீட்டர் நீளம் கொண்ட சாலை உள்ளது. தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி சாலையை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிசுபாலன், கையாலக்கல், திற்பரப்பு.
வீணாகும் குடிநீர்
திருவிதாங்கோடு அடுத்த வட்டம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் வீணாக பாய்ந்து வருகிறது. மேலும், அந்த குடிநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார பத்மநாபன், திருவிதாங்ேகாடு.
சுகாதார சீர்கேடு
திங்கள்நகரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையின் நுழைவு வாசல் பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் தேங்காமல் வடிந்தேட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.