பள்ளிகளில் புகார் பெட்டி: தயக்கமின்றி திறக்கப்படுகிறதா மாணவர் மனசு?


பள்ளிகளில் புகார் பெட்டி:  தயக்கமின்றி திறக்கப்படுகிறதா   மாணவர் மனசு?
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டியின் மூலம் மாணவர்கள் தயக்கமின்றி தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை புகாராக தெரிவிக்கிறார்களா? அதில் தடை எதுவும் இருக்கிறதா? என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

மாணவர் மனசு பெட்டி

கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.

உடனுக்குடன் தீர்வு

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.

என்ன மாதிரியான புகார்கள்?

பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிகம் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... வகுப்பு தலைவன் என்னை அதிகம் திட்டுகிறான்... வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை... உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள்தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.

இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள்... தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள்... ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள்... என்பது போன்ற நல்ல நோக்கத்துடனும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது... கழிவறை கதவு உடைந்துள்ளது... குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது... செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது... என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்...

மேலும், வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய நண்பர் கடந்த சில நாட்களாக சரியாக பேசவில்லை. உடனே அழைத்து என்னிடம் பேச வையுங்கள், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், ஓடி விளையாட அனுமதியுங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காதல் கடிதம்

என்னதான் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதில் சில முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்காது. அதன்படி, சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவர் மனசு பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் காதல் கடிதம் போடப்பட்ட தகவல்களும் வெளியாகின.

தேனி மாவட்டத்தில் இந்த புகார் பெட்டிகள் மூலம் மாணவர்களின மனசு திறக்கப்படுகிறதா? என்று பார்த்தால் இன்னும் மாணவ, மாணவிகள் மத்தியில் தயக்க நிலை இருப்பதை அறிய முடிகிறது. சில இடங்களில் தலைமை ஆசிரியர் அறைக்கு அருகிலும், சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைக்குள்ளும் புகார் பெட்டி இருப்பதால் அங்கு சென்று புகார் அளிக்க மாணவ, மாணவிகள் தயக்கம் காட்டுகின்றனர். தலைமை ஆசிரியர் மீதே புகார் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் எப்படி கொடுக்க முடியும்? என்ற நிலையும் உள்ளது.

பாடம் நடத்துவது புரியவில்லை

இதுதொடர்பாக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி கமலேஸ்வரி:- பள்ளிகளில் புகார் பெட்டி வைத்து இருப்பதால் மாணவ, மாணவிகள் தங்களின் பிரச்சினைகளை தயக்கமின்றி சொல்ல முடிகிறது. சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாவிட்டாலும் புகார் தெரிவிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால், ஆசிரியர்கள் யாராவது பாடம் நடத்துவது புரியவில்லை என்றாலும் நேரடியாக சொல்ல முடியாவிட்டால் இந்த புகார் பெட்டி வாயிலாக சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பள்ளி மாணவிகள் இந்த புகார் பெட்டியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாணவிகள் தங்களின் புகார்களை தயக்கமின்றி தெரிவிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் அறை மட்டுமின்றி, மறைவான இடங்களிலும் புகார் பெட்டியை வைக்கலாம்.

மாணவர்களின் தீய பழக்கம்

கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத்:- மாணவர் மனசு பெட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இந்த புகார் பெட்டியில் என்ன புகார்களை மாணவர்கள் தெரிவிக்கிறார்கள் என்பதை நாங்கள் நேரடியாக பார்க்க முடியாது. இதற்கான குழுவினர் வந்து புகார் பெட்டியை திறந்து கடிதங்களை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் தெரிவிக்கும் போது தான் எந்த மாதிரியான புகார்கள் வந்துள்ளது என தெரிய வரும். பள்ளி மட்டுமின்றி தங்களின் வீடுகள், பள்ளிக்கு வரும் வழியில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

தேனியை சேர்ந்த மாணவர் பரத்- ஆசிரியர் களிடம் நேரடியாக சொல்ல தயங்கும் விஷயங்களையும் இந்த புகார் பெட்டியின் மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது பல இடங்களில் மாணவர்கள் மத்தியில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தீய பழக்கம் கொண்ட மாணவர்களை வகுப்பறையில் ஆசிரியர்களிடம் கூறினால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சண்டைபோட நேரிடும். ஆனால், இந்த புகார் பெட்டியின் மூலம் புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் கொடுத்து விட்டால் யார் தகவல் கொடுத்தார் என்ற விவரம் வெளியே தெரியாது. அதே நேரத்தில் தீய பழக்கத்தில் இருந்து மாணவர்களை கண்டித்து, அறிவுரைகள் வழங்கி அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும் வாய்ப்பாக அமையும்.

தயக்கம் தேவையில்லை

தேனியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன்:- புகார் பெட்டியில் மாணவர்கள் தங்கள் மனதில் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர் ஒருவர் நடத்தும் பாடம் சரியாக புரியவில்லை என்று ஒரு புகார் வந்து இருந்தது. உடனே அந்த ஆசிரியரை அழைத்து அறிவுரைகள் வழங்கினோம். சக மாணவர்கள் 2 பேர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ஒரு புகார் வந்தது. ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி நன்றி தெரிவித்தும் மாணவர்கள் கடிதம் எழுதி போட்டு இருந்தனர்.

தினமும் காலையில் பள்ளியில் இறைவணக்கம் நேரத்தில் இந்த புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவ, மாணவிகள் தயக்கமின்றி இந்த புகார் பெட்டியில் தங்களின் புகார்கள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இதனால், அவர்கள் தயங்கவோ, அச்சப்படவோ தேவையில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதுபோல், சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் சிலரிடம் இந்த மாணவர் மனசு பெட்டியின் பயன்பாடு குறித்து கேட்டபோது, "இது மிகவும் பயனுள்ள நடவடிக்கை. அதே நேரத்தில் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை அளிக்க இன்னும் தயக்க நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. சைல்டு லைன் எண்ணுக்கு வரும் அளவுக்கு கூட புகார் பெட்டியில் புகார்கள் வரவில்லை. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைக்குள்ளும், தலைமை ஆசிரியர் மேஜை மீதும் புகார் பெட்டி உள்ளது.

இதனால், அங்கு சென்று புகாரை தெரிவித்தால் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற தயக்கம் நிலவுகிறது. எனவே, மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதியில் புகார் பெட்டியை வைக்கலாம். இது இன்னும் தயக்கமின்றி புகார்களை தெரிவிக்க ஏதுவாக அமையும். அவ்வாறு செய்தால் மாணவர்களின் மனசு தயக்கமின்றி திறக்கப்படும்" என்றார்.


Next Story