தமிழகத்தில் முதல் முறையாக தேனி பள்ளியில் நீதித்துறை சார்பில் புகார் பெட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் முதல் முறையாக தேனி பள்ளியில் நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக தேனி பள்ளியில் நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
புகார் பெட்டி
தேனி மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, போலீஸ் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகார் பெட்டி வைக்கும் நிகழ்ச்சி, தேனி நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, புகார் பெட்டியை திறந்து வைத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, புகார் பெட்டியின் சாவியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகனிடம் ஒப்படைத்தார். விழாவில் புகார் பெட்டி வைப்பதன் நோக்கம் குறித்து நீதிபதி ராஜ்மோகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிமன்றங்கள் ஏராளமான தீர்ப்புகள் வழங்குகின்றன. ஆனால் தீர்ப்புகள் நிறைவேற்றப்படுகிறதா என்றால் சந்தேகம் தான். சென்னை ஐகோர்ட்டு இந்த புகார் பெட்டியை அனைத்து பள்ளிகளிலும் வைத்து, அதனை நீதித்துறை மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டது.
பாலியல் குற்றங்கள்
இதில் மாணவ-மாணவிகள் தெரிவிக்கும் குற்றப்புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மனநலம் தொடர்பான புகார்களுக்கு பெண் மன நல டாக்டர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக தேனியில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் நடந்தது. அந்த மாணவியின் கோரிக்கை, அவரின் மனநிலையை முன்கூட்டியே கேட்டிருந்தால் அந்த சம்பவத்தை தடுத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பார்வையில் படும் வகையில் அவர்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையிலும் இந்த புகார் பெட்டியை வைக்க வேண்டும்.
குழந்தைகளை பாதுகாப்பதற்காக தான் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாணவிகளிடம் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தைரியமாக புகார்
மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் பள்ளியிலும், பள்ளிக்கு வரும் வழிகளிலும், தங்கள் வீடுகளிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையூறுகளை இந்த புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். தயக்கம் இன்றி, தைரியமாக புகார்களை தெரிவிக்கலாம். பாடங்கள் புரியவில்லை என்றால் கூட குறைகளை இதன் வழியே தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோபிநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, உஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.