டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் குறைதீர்வு கூட்டத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்வதாகவும், இதனை தடுக்க கடை முன்பு விலைப்பட்டியில் வைக்க வேண்டும் என்று குறை தீர்வுகூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்வதாகவும், இதனை தடுக்க கடை முன்பு விலைப்பட்டியில் வைக்க வேண்டும் என்று குறை தீர்வுகூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, முத்தியோர் உதவித்தொகை, பொதுநலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 305 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்ந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூடுதல் விலை
கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர். இதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் மதுப்பிரியர்களுக்கு கட்டாயமாக பற்று சீட்டு வழங்க வேண்டும். மதுபான வகைகளின் விலையை குறிப்பிட்டு கடை முன்பாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மேலும் கூடுதல் பணம் வசூல் செய்யும் கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
நிறுத்த வேண்டும்
இந்திய குடியரசு கட்சியினர் அளித்த மனுவில், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு குறவர் சமுதாயத்தினர் குறவன் எஸ்.சி. சாதிச்சான்றிதழ் கேட்டு உள்ளிருப்புப்போராட்டம் நடத்தினர். அதன்பேரில் பலருக்கு குறவன் எஸ்.சி. சான்றிதழ் சரியான முறையில் ஆய்வு செய்யாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், உண்மையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும். இதனால், உண்மையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும்ரே சரியான முறையில் ஆய்வு நடத்தாமல் குறவன் சாதிச்சான்றிதழ் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வரசு, கலால் உதவி ஆணையர் பானு, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.