தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு நாய்களுடன் வந்து மனு கொடுத்த இந்து எழுச்சி முன்னணியினர்
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு நாய்களுடன் வந்து இந்து எழுச்சி முன்னணியினர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் கோட்டைச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிலர் இன்று வந்தனர். அப்போது அவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் சில நாய்களையும் உடன் அழைத்து வந்தனர்.
பின்னர் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளிலும் தெருநாய்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. 2 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் வெறிநாய் கடித்து சில நேரங்களில் மனித உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
நோய்வாய்ப்பட்டு சில நாய்கள் சாலையோரம் சுற்றித்திரிவதால் பொதுமக்ககளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நாய்கள் பெருக்கத்தினால் பல்வேறு இடையூறுகள் மனித உயிர்களுக்கு ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர். நாய்களுடன் வந்து மனு கொடுத்த இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.