போலீஸ் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் மனு
குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் நேற்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தையில் நகராட்சிக்கு சுங்கம் செலுத்தி காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் நாங்கள் கடை நடத்த வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும், பணம் தரவில்லை என்றால் இங்கு யாரும் கடை வைக்கக் கூடாது என்று எங்கள் கடைகளை எடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்.
மேலும் தரணம்பேட்டை காய்கறி சந்தையில் பலதரப்பட்ட சாதிகளை சேர்ந்த வியாபாரிகள் பாகுபாடு இன்றி கடை நடத்தி வரும் சூழ்நிலையில் அந்த நபர் சாதிகளை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.