கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பெயரையும் பதிவு செய்ததாக புகார்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு -சிவகங்கை கலெக்டர் நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பெயரையும் பதிவு செய்ததாக புகார்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் நடவடிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கண்டதேவி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எங்கள் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு பல்வேறு நபர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தில் எங்கள் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், அவரது தாயார், உடன்பிறந்தவர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதன் மூலம் அவர்கள் 100 நாள் வேலை செய்ததாக பொய்யாக கணக்கு காண்பித்து ஊராட்சி நிதியை மோசடி செய்து வருகின்றனர். இதே போல ஊராட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தில் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்து சட்ட விதிகளுக்கு மாறாக வீடுகள் கட்டி வருகின்றனர்.
இந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையாக விசாரிக்கவில்லை. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்து வரும் கண்டதேவி ஊராட்சி தலைவர் மீதும், அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை விலக்கி வைத்துவிட முடியாது. எனவே அவரது கோரிக்கை மனுவை தகுதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் உரிய உத்தரவை 12 வாரத்தில் சிவகங்ைக மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். முன்னதாக அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, உரிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.