கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி இருந்ததாக புகார்


கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி இருந்ததாக புகார்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் உள்ள உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி இருந்ததாக புகார் அளித்தார். இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் உள்ள உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி இருந்ததாக புகார் அளித்தார். இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கர்ப்பிணி பெண்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியை சேர்ந்தவர் செல்வம். இவர் 8 மாத கர்ப்பிணியான தனது மகள் செல்வலட்சுமியை மருத்துவ பரிசோதனைக்காக நேற்று காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தனது மகள் சாப்பிட வேண்டும் என்று கூறியதால் பூம்புகார் சாலையில் உள்ள சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த உணவகத்தில் செல்வலட்சுமி பொங்கல், வடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். வடையை சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வலட்சுமி இதுகுறித்து கடை நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வந்த கடை நிர்வாகத்தினர் கருவேப்பிலை கிடக்கும் என்று இலையில் இருந்த வடையை பறித்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது கடையின் வாசலில் டீ சாப்பிட்டு கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை செல்வம் மகளை அழைத்துக் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

நோட்டீஸ்

அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி பெண் நலமுடன் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையினரிடம் செல்வம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு பதில் அளிக்க உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உயர்தர சைவ உணவகத்தின் உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது. தற்போது வடையில் பல்லி வெந்து கிடப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story