மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு


மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு
x

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தரம் பிரிக்காத குப்பைகளால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்

திருநெல்வேலி

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவரும், ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினருமான மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த பகுதி மக்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி ராமையன்பட்டி குப்பை கிடங்கில் நாள்தோறும் அதிகளவில் திடக்கழிவு குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் உள்ள மண்வளம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அருகில் உள்ள குடியிருப்பில் ஆழ்துளை கிணறுகளில் நீர் வளம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

அன்றாட குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வைக்காமல் மறுசுழற்சி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிரமமின்றி வாழ்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதற்கு சில ஊழியர்களே காரணம் என தெரிய வருகிறது. ஏனென்றால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கழிவுகளை எடுத்துச்செல்வதற்காக இதுபோன்று தீ வைப்பதாக தெரிகிறது.

எனவே உரிய நடவடிக்கை எடுத்து தீ விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


Next Story