சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து 11 பேர் வெளிநடப்பு கலெக்டரிடம் புகார்


சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து 11 பேர் வெளிநடப்பு கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 11 March 2023 6:45 PM GMT (Updated: 11 March 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து 11 பேர் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை

காரைக்குடி

சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து 11 பேர் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி மன்ற கூட்டம்

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் தேவி மாங்குடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அண்ணாமலை வரவேற்றார்.

கூட்டம் தொடங்கியவுடன் துணைத்தலைவர் பாண்டியராஜன் பேசியதாவது:-

தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை அந்நிகழ்வில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது, புதிய வீடுகளுக்கான வரைபட அனுமதியில் முறை கேடு தொடர்கிறது. சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து ரியல் எஸ்டேட்காரர்களுக்கு சாதகமாக பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை களஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது தவறு. பெருமாம்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தன்னிச்சையாக தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்வது தவறானதாகும். ஊராட்சியில் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். என்று கூறினார். அதனையொட்டி மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 11 பேர் துணைத்தலைவர் பாண்டியராஜன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

திடக்கழிவு மேலாண்மைக்காக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.35 லட்சத்தில் என்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூட முடிவெடுக்க முடியாமல் கூட்டம் முடிவுற்றது.

ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்

தலைவர் தேவி மாங்குடி ஆதரவு கவுன்சிலர்கள் 4 பேர் கூறுகையில், சொக்கலிங்கபுரம் குடியிருப்பு நலச்சங்கத்தினர் வேண்டுகோளின் பேரிலேயே பூங்கா பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாத நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேஷன் கடை கட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது. கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதே அலுவலக வழக்கம்.அதில் முறைகேடுகள் இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்கலாம். உறுப்பினர்கள் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து வாக்களித்த மக்களுக்கு கடமையாற்ற வேண்டும் என கூறினர்.

கலெக்டரிடம் புகார்

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் துணைத்தலைவர் பாண்டியராஜன் தலைமையில் சிவகங்கை சென்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து ஊராட்சி நிர்வாகம் குறித்த புகார் மனுவை அளித்தனர். நகராட்சிக்கு இணையாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றான சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர்கள் மோதலால் தற்போது அடிப்படை வசதிகளைக்கூட பெற முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனடியாக நல்ல தீர்வினை தரவேண்டும்.வரி செலுத்தும் மக்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும் என இப்பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறினார்.


Next Story