கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் புகார் அளிக்கலாம்கலெக்டர் தகவல்
கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அடுக்கம்பாறை
கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்
கணியம்பாடி அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பூங்கொடி, கால்நடை துணை இயக்குனர் ஸ்ரீஹரி, உதவி இயக்குனர் அந்துவன், தாசில்தார் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் குமார், கவுன்சிலர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை வட்டார மருத்துவ அலுவலர் காளீஸ்வரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 700 மாடுகள், 500 ஆடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தாதுஉப்பு, குடற்புழு நீக்கும் மருந்து, ஊட்டச்சத்து டானிக், தீவனம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புகார் அளிக்கலாம்
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் அனைத்து பகுதிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளுக்கு தோல் நோய் பரவாமல் தடுக்க வாயில் மருந்து அளிக்கப்படுவதுடன், பெரிய பசுக்களுக்கு தடுப்பூசியும் போடுகிறோம். நோயின் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் மருத்துவ சிறப்பு முகாம்களுக்கு கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் கலெக்டர் அல்லது கால்நடைத்துறை இணை இயக்குனருக்கோ புகார் தெரிவிக்கலாம். தற்போது மழைகாலம் என்பதால் மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு பகுதிகளில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க அந்த பகுதிகளில் உடனடியாக சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் வேலூர் கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் சரஸ்வதி, துணை பேராசிரியர் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, வருவாய் ஆய்வாளர் உலகநாதன், கால்நடை மருத்துவ உதவியாளர் சத்தியசீலன், கிராம நிர்வாக அலுவலர் ரீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.